பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவு சீனாவை பின்வாங்க செய்தது- அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்

by Editor / 09-12-2021 12:56:21pm
பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவு சீனாவை பின்வாங்க செய்தது- அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் புகழாரம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி வந்துள்ளார்.
 
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, விபத்தில் பலியான பிபின் ராவத் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவத்திற்காக பணியாற்றியபோது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். நானும் அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தோ-திபெத் எல்லையில் சீன நாட்டின் ராணுவம் அத்துமீற முயன்றபோது பிபின் ராவத்தின் தீர்க்கமான முடிவுகள் பல நேரங்களில் சீனாவை பின்வாங்க செய்துள்ளது. இந்தியா சிறந்த ராணுவ வீரரை இழந்து விட்டது. அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும். அவரது பணியானது மகத்தானது. எந்த காலத்திலும் மறக்க முடியாது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு, பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம், பதிவாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via