சபரிமலை பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடக்கம்.

by Editor / 12-12-2021 06:23:27pm
சபரிமலை பக்தர்களுக்கு தபால்  மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடக்கம்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.
கோரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவிலுக்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். உடனடி முன்பதிவு மூலம் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சபரிமலைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் கோவிலுக்கு கூடுதல் பக்தர்கள் வருகிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் சன்னிதானத்தில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல பாரம்பரிய பாதையான நீலிமலை பாதை வழியாகவும் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் பலிதர்ப்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க வழக்கமாக வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா பிரச்சனையால் கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் தபால் மூலம் சபரிமலை பிரசாதத்தை வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதற்காக இந்திய தபால் துறையின் கேரள மண்டல அலுவலகத்துடன் கோவில் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள ஐய்யப்ப பக்தர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தபால் நிலையங்களில் சபரிமலை பிரசாதம் கேட்டு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்காக 3 வித கட்டணங்களை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ரூ.450, ரூ.850, ரூ.1,510 ஆகிய கட்டணங்களில் பிரசாத தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு தொகுப்பிலும் அரவணை, நெய், குங்குமம், மஞ்சள் மற்றும் விபூதி ஆகியவை இருக்கும். ஒரு பக்தர் எத்தனை பிரசாத பார்சல் வேண்டுமானாலும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via