மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவீத பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

by Admin / 03-01-2022 04:31:41pm
மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவீத பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி இருந்தது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது.
 
முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 700-க்கும் கீழ் சென்றது. சென்னையில் தினசரி பாதிப்பு 150-க்கும் கீழ் குறைந்து காணப்பட்டது.

இதனால் கொரோனா தொற்று குறைந்து மக்கள் அதனை முழுமையாக மறந்துவிட்டனர். தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடங்கள் பழைய மாதிரிகளை கூட்டின. ஆனால் அந்த நேரத்தில் தான் ஒமைக்ரான் பரவல் தொடங்கியது.

இதற்கிடையே கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் கடந்த மாதம் இறுதியில் இருந்தே மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20-ந்தேதி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 126 ஆக இருந்தது.

அன்று முதல் சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 27-ந்தேதி அன்று சென்னையில் 172 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தமிழகம் முழுவதும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதன் பிறகு கடந்த 6 நாட்களில் கொரோனாவின் வேகம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்துள்ளது. டிசம்பர் 28-ந்தேதியன்று சென்னையில் 194 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்துகொண்டே சென்றுள்ளது. அந்த வகையில் சென்னையில் 29-ந் தேதியன்று 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அது 31-ந் தேதி 589 ஆக அதிகரித்தது.

நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 682 ஆக இருந்தது. தமிழகம் முழுவதும் அன்று 1,489 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் தினமும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100 ஆக உள்ளது.

இப்படி தினமும் நூறு, நூறாக உயர்ந்தால் சென்னையில் முதல் அலை, 2-வது அலை போல பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிட வாய்ப்பு உள்ளது.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என்று தெரிகிறது. மொத்தத்தில் கடந்த 27-ந்தேதியில் இருந்து நேற்று (2-ந்தேதி) வரையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.

மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவீத பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நூற்றுக்கும் கீழ் தான் பாதிப்பு இருந்தது. தற்போது செங்கல்பட்டிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று தமிழகத்தில் பதிவான 1,594 புதிய கொரோனா பாதிப்புகளில் சென்னைக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையிலும், செங்கல்பட்டிலும் தான் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 8 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக இது கருதப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களுக்குள் 50 சதவீத படுக்கைகள் நிரம்பிவிட்டதை மருத்துவ நிபுணர்கள் சற்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்து பார்க்கிறார்கள்.

குறிப்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனை, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளிலும் கடந்த 2 நாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த 3 மருத்துவமனைகளிலும் கடந்த வாரம் வரை சராசரியாக 50 கொரோனா நோயாளிகள் மட்டுமே இருந்தனர். இரண்டேநாளில் இது 200 ஆக உயர்ந்துள்ளது. இதேவிகிதத்தில் அதிகரித்த தால் இன்னும் சில தினங்களில் இந்த 3 மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பிவிடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது புதிதாக பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளில் பெரும் பாலானவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாதித்தவர்களையும் கொரோனா மீண்டும் பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் அச்சமும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் நுரையீரலை பாதிக்காது என்று பலரும் துணிச்சலுடன் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். ஆனால் ஒமைக்ரான் பாதித்தவர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வகை கொரோனாவுக்கும் ஒமைக்ரானுக்கும் வேறு வேறு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவ நடவடிக்கைகளை மாற்ற வேண்டி இருப்பதால் டாக்டர்களும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தங்களை சுற்றியுள்ள ஆபத்தை முழுமையாக உணராமல் இருப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகள் வேதனையும், கவலையும் தெரிவித்துள்ளனர். 2-ம் அலையில் கடும் உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் மக்கள் மனதில் அந்த பயம் நீங்கி விட்டது போன்ற நிலை உருவாகி உள்ளது.

பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் இல்லாமலேயே வருகிறார்கள். பொழுதுபோக்கு மையங்கள், மால்கள் மற்றும் கடைகள், விழாக்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியாமலேயே இருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான பயம் துளியும் இல்லாமலேயே உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 60 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை. தனிநபர் இடைவெளியை கடை பிடிப்பது 100 சதவீதம் இல்லை என்று ஆகிவிட்டது.

தமிழகத்தில் 3-வது அலை தொடங்கிவிட்டது என்று அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களும் இதேநிலை நீடித்தால் பொங்கலுக்குள் கொரோனா 3-வது அலை சமூக பரவலாக மாறிவிடும் என்று கணித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2 நாட்களாக புத்தாண்டையொட்டி சென்னையில் பொழுதுபோக்கு மையங்களில் கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் நீங்காததையே இது காட்டுகிறது.

மெரினா கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்த போதிலும் மக்கள் தடையை மீறி அங்கு திரண்டதை காண முடிந்தது. நமக்கு நாம் தான் பாதுகாப்பு என்பதை சென்னை மக்கள் உணர வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

   
   

 

Tags :

Share via