ஜனவரி 21-ந்தேதி உச்சத்தை தொட்ட கொரோனா 3-வது அலை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

by Admin / 04-02-2022 12:27:59pm
 ஜனவரி 21-ந்தேதி உச்சத்தை தொட்ட கொரோனா 3-வது அலை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது.
 
கடந்த மாதம் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.

குறிப்பாக ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு தினசரி பாதிப்பு மளமளவென உயர்ந்தது. அந்த வகையில் ஜனவரி 21-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு நாடு முழுவதும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 245 ஆக இருந்தது.

ஆனால் கொரோனா 2-வது அலையின்போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 வரையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதிப்பே கொரோனா 3-வது அலையின் அதிகபட்ச பாதிப்பு என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லா அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் தடுப்பூசிகளுக்காக ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் 34 மாநிலங்களில் தினசரி பாதிப்பு குறைந்து இருக்கிறது. மொத்தம் 268 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.

அதே போன்று மிகவும் ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கி உள்ளது. 3-வது அலையின்போது 40 வயதில் இருந்து 44 வயதானவர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஆனால் இது கடந்த 2-வது அலையின்போது வேறு மாதிரியாக காணப்பட்டது.

அப்போது 55 வயது மதிக்கத்தக்கவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு இருக்கிறது.

16 மாநிலங்களில் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பதாகவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கேரளாவில் தினசரி பாதிப்பு தற்போதும் 40 ஆயிரத்துக்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று 42 ஆயிரத்து 677 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ பணியாளர்கள் ஆவார்கள்.

கேரளாவை போன்று மிசோரம் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாமலேயே இருக்கிறது. கேரளாவில் 47 சதவீதம் அளவுக்கும், மிசோரம் மாநிலத்தில் 34 சதவீத அளவுக்கும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த மாதம் 21-ந்தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக நாடு முழுவதும் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வராததையடுத்து தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த மாதம் 21-ந்தேதி கொரோனா தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை கடந்து பாதிவாகி இருந்தது. அன்று 28,561 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை அதன் பிறகு படிப்படியாக குறைந்துள்ளது.

அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் (ஜனவரி 31-ந்தேதி) தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. அன்று 19,280 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைந்துள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இதன்படி நேற்று தினசரி பாதிப்பு 11,993 ஆக குறைந்து இருக்கிறது. கடந்த மாதம் 8-ந்தேதி தினசரி பாதிப்பு 10,978 ஆக இருந்தது. இதன் மூலம் 3 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு கடந்த 15-ந்தேதி மிகவும் அதிகமாக காணப்பட்டது. அன்று தினசரி பாதிப்பு 8,978 ஆக இருந்தது. அது தற்போது படிப்படியாக குறைந்து 1,751 ஆக இருக்கிறது.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பல இடங்களில் வேட்பாளர்கள் முக கவசம் இன்றி சுற்றி திரிவதையும் காண முடிகிறது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

வேட்பாளர்கள் முக கவசம் அணியாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது அலையின் வேகம் குறைந்து இருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிறகும் இதே நிலையில் நீடிக்குமா? என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

 

Tags :

Share via