நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம் தேர்தல் ஆணையம்

by Editor / 12-02-2022 08:18:04am
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம் தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தெரு, தெருவாக வீடு, வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வாகனங்களில் ஒலி பெருக்கி மூலமும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவாக தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வாகன பேரணி, ஊர்வலம் போன்றவையும் நடத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வரை இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதேவேளையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாகன பேரணி, ஊர்வலம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாகன பேரணி, ஊர்வலம் செல்ல விரும்பும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் மாவட்ட கலெக்டர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

 

Tags : இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம் தேர்தல் ஆணையம்

Share via