நாதசுவர இசைக் கலைஞர் சேக் சின்ன மௌலானா

by Editor / 24-07-2021 08:20:38am
நாதசுவர இசைக் கலைஞர்  சேக் சின்ன மௌலானா

சேக் சின்ன மௌலானா (மே 12, 1924 - ஏப்ரல் 13, 1999) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார். ‘சேக்’ என நேயர்களால் அழைக்கப்பட்ட இவர், தனது இராக ஆலாபனைக்காக பெரிதும் புகழப்பட்டார்.


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கரவடி எனும் சிற்றூரில் பிறந்தவர் சேக் சின்ன மௌலானா. ஆரம்பத்தில் தனது தந்தையார் சேக் காசிம் சாகிப்பிடமும் பின்னர் சேக் அதம் சாகிப் எனும் பிரபல கலைஞரிடமும் நாதசுவர இசையினைக் கற்றார். ‘தஞ்சாவூர் பாணி’ எனச் சொல்லப்படும் வாசிப்பு முறையின் மீது ஆவல் கொண்ட சேக், நாச்சியார்கோவிலைச் சார்ந்த ராஜம்-துரைக்கண்ணு சகோதரர்களிடம் சில வருடங்கள் நாதசுவர இசையினைப் பயின்றார்.


பிரபல நாதசுவர இசைக் கலைஞர் டி. என். ராஜரத்தினம் பிள்ளையை தனது மானசீக குருவாக ஏற்றவர், சேக் சின்ன மௌலானா. ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பு முறையினை தனது சிறு வயது முதல் நன்கு கவனித்து வந்து தன்னுடைய வாசிப்பு முறையில் அந்த நுட்பங்களை இணைத்துக் கொண்டார் சேக்.

சேக் சின்ன மௌலானா தனது முதலாவது இசை நிகழ்ச்சியை 1960 களில் தமிழ்நாட்டில் நிகழ்த்தினார். ரெங்கநாத கடவுள்மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி காரணமாக சிறீரங்கத்தை தனது வசிப்பிடமாகக் கொண்டார். காவிரியாற்றங்கரையில் ’சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமத்தை’ ஏற்படுத்தினார். இந்த ஆசிரமம் பல திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இவரது பாரம்பரியத்தை இவரது பேரன்கள் காசிம், பாபு ஆகியோர் பாதுகாத்து வருகின்றனர்
1972 ஆம் ஆண்டு, புது தில்லியில் நடந்த மூன்றாவது அனைத்துலக ஆசிய வணிகக் கண்காட்சியில் நாதசுவரம் வாசித்தார்.1973 ஆம் ஆண்டு, புது தில்லி செங்கோட்டையில் வாசித்தார்.

இந்தியாவின் 25ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களையொட்டி இந்திய அரசாங்கம் இவருக்கு நாதசுவர இசையை வழங்கும்படி அழைப்பு விடுத்திருந்தது.1973 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் பயணித்தார். கிழக்கு-மேற்கு பரிவர்த்தனை எனும் திட்டத்தின்கீழ் அவர் சென்றபோது, நியூயார்க்கின் வஸ்சர் கல்லூரியால் ‘நாதசுவர ஆச்சர்யா’ எனும் பட்டம் சூட்டப்பட்டார்.1982 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த ஏழாவது ஆசியக் கலை விழாவில் இந்தியாவின் கலைப் பிரநிதியாக கலந்து கொண்டார்.1987 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சோவியத் நாட்டில் நடந்த இந்திய விழாவில் தனது இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்.1991 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜெர்மனியில் நடந்த இந்திய விழாவின் துவக்கநாள் இசை நிகழ்ச்சிகளில் வாசித்தார். அதன்பிறகு ஜெர்மனி முழுவதும் பயணித்து நாதசுவர இசை நிகழ்ச்சியை வழங்கினார். அங்கிருந்து பிரான்ஸ் பயணித்து நிகழ்ச்சிகளில் வாசித்தார்.


1996 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடந்த அனைத்துலக இசை விழாவில் இசை நிகழ்ச்சியை வழங்கினார்.
1997 ஆம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசில் நடந்த இந்திய சுதந்திரத்தின் போன்விழாக் கொண்டாட்டங்களில் தனது இசை நிகழ்ச்சியை வழங்கினார்.இலங்கை நாட்டிற்கு பலமுறை சென்று நேயர்களை மகிழ்வித்துள்ளார்.

 

Tags :

Share via