பேஸ்புக்கை பார்த்து நடவடிக்கை - எம்.எல்.ஏவை பாராட்டும் தொகுதி மக்கள்!

by Editor / 21-05-2021 09:21:24am
பேஸ்புக்கை பார்த்து நடவடிக்கை - எம்.எல்.ஏவை பாராட்டும் தொகுதி மக்கள்!

மயிலாடுதுறை வடக்கு அரண்மனை தெருவில் புதைசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மயிலாடுதுறை எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.அக்பர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் அலுவலர்களுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, புதைசாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி வருவதாகவும், இதுகுறித்து நகராட்சிக்கு புகார் தெரிவித்தால், லாரியில் வந்து கழிவுநீரை உறிஞ்சி எடுத்துச் சென்று விடுகின்றனர் எனவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். இதுகுறித்து புகார் அனுப்பிய எம்.ஏ.அக்பர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: எங்கள் தெருவில் உள்ள சுகாதார பிரச்சினை குறித்து முகநூலில் புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் வந்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட எம்எல்ஏ எஸ்.ராஜ்குமாரை எங்கள் பகுதி மக்கள் பாராட்டினர் என்றார்.

 

Tags :

Share via