28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிக்கினார்.

by Staff / 24-04-2022 02:05:31pm
28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப் பணத்துடன் கோவை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிக்கினார்.

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகம் பாலசுந்தரம் ரோட்டில் உள்ளது. இங்கு போக்குவரத்து இணை கமிஷனராக உமாசக்தி பணியாற்றி வந்தார். அவரது கட்டுப்பாட்டில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்கள் வருகிறது.

இந்த நிலையில், நேற்று பகல் 11 மணியளவில் பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணத்தை வசூலித்து கொண்டு கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி வழியாக இணை கமிஷனர் உமாசக்தி காரில் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே லஞ்சஒழிப்பு போலீஸ் தனிப்படையினர் விரைந்து சென்று உமாசக்தியின் காரை தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினார்கள். இதை பார்த்து இணை கமிஷனர் உமாசக்தி, லஞ்சப் பணத்தை பெற்றுக்கொடுக்கும் ஓய்வு பெற்ற உதவியாளர் செல்வராஜ் என்பவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சோதனையில் காருக்குள் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனே காருடன் உமாசக்தி, செல்வராஜ் ஆகியோரை வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து உமாசக்தி, ஓய்வுபெற்ற உதவியாளர் செல்வராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதுதொடர்பாக துறை ரீதியாகவும் வட்டார போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப் படுகிறது.

 

Tags :

Share via