பெண்களை குறிவைத்து நகையை பறிக்கும் மர்ம நபர்கள்

by Editor / 24-06-2022 05:06:46pm
பெண்களை குறிவைத்து நகையை பறிக்கும் மர்ம நபர்கள்

ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. மொடக்குறிச்சி, பெருந்துறை ஈரோடு மாநகர் பகுதியில் சமீபத்தில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் இதனையும் மீறி  வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு 2 பெண்களிடம் செயின் பறிப்பு நடந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு.ஈரோடு சங்கு நகரை  சேர்ந்தவர் அயுஸ்பாட்சா. இவரது மனைவி  குல்சாரா (45). இவர்களது மகன் சதாம்உசேன். இவர்களுக்கு சொந்தமான டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடையை மூவரும் மாற்றி மாற்றி பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி மகன் என மூவரும் கடையில் இருந்தனர். அப்போது கடையை மூடும் நேரம் வந்தபோது டிப்டாப்பாக கடைக்கு வந்த ஒரு வாலிபர் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளார். சிறிது தொலைவில் மற்றொரு வாலிபர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் காத்துக் கொண்டிருந்தார். அந்த வாலிபர் கேட்ட பொருளை கொடுத்து விட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவரது மகன் சதாம் உசேன் ஆகியோர் கடையில் இருந்த பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர்.குல்சாரா கடையின் வெளியில் இருந்த குப்பையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் குல்சாரா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குல்சாரா போட்ட சத்தத்தைக் கேட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவரது மகன் சதாம் உசேன் ஆகியோர் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினர்.அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு வாலிபர் வண்டியில் ஏறி தப்பி சென்றனர். பாதுகாப்பு கருதி கடையில் ஆயுஸ் பாட்சா சிசிடிவி கேமராவை பொருத்தி இருந்தார். அந்த கேமரா காட்சியில் கடைக்கு வந்த வாலிபர் உருவம் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மனைவி அம்சா (37) நேற்று இரவு கடைக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் வந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அம்ச கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என்று கத்தினார். இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லை. இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் ஒரே இரவில் இரண்டு பெண்களிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via