சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மரணம் 

by Editor / 24-07-2021 07:48:24pm
சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மரணம் 


கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து, விமான, ரயில் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இந்த ஊரடங்கின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமலும், உணவிற்கு வழியில்லாமலும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால், அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து, சைக்கிளில் சென்று வந்தனர். அப்போது உணவில்லாமல் சிலர் பாதி வழியிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறின.


அந்த சமயத்தில் பீகாரை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் தங்கி ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். ஊரடங்கால் ஆட்டோ ஓட்ட முடியாத நிலையால் ஏற்பட்ட வறுமையால் அவர் உணவிற்கே வழியின்றி வாடியுள்ளார். மேலும், அவருக்கு அப்போது காயம் ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து, அவரது 15 வயது மகள் ஜோதி குமாரி மோகன் பஸ்வானை சொந்த ஊர் அழைத்து செல்ல முடிவெடுத்து சுமார் 1,200 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்.

இதனால், அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அவர் சைக்கிள் பெண் என்றே அழைக்கப்பட்டு வந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகவே அதை அறிந்த அப்போதய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ட்விட்டர் வாயிலாக தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via