செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

by Editor / 28-07-2022 12:34:28pm
 செஸ் ஒலிம்பியாட் போட்டி  தொடக்க விழா  பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 188 நாடுகள் பங்கேற்கின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர்ஜோதி ஓட்டத்தி டெல்லியிலுள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் பிரதமர் மோடி கடந்த ஜூன் 19ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த ஜோதி பல முக்கியமான நகரங்களில் பயணம் செய்து நேற்று சென்னை வந்தடைந்தது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றன. இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி முதலில் பெலாரசில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து இந்த போட்டி அங்கு நடைபெறாது என சர்வதேச சதுரங்க போட்டிகளின் கூட்டடமைப்பு அறிவித்து. இதைதொடர்ந்து இந்த போட்டி நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது.


44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகின்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் தனிவிமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ் அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு மாலை 6 மணிக்கு வருகை தரவுள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் முருகன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.


செஸ் போட்டிக்காக தமிழ்நாடெங்கும் காணும் இடமெல்லாம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நேப்பியர் பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களில் செஸ் போர்டில் உள்ள கருப்பு, வெள்ளை நிறங்கள் வரையப்பட்டுள்ளன. செஸ் போட்டிக்கான சின்னமான தம்பி உருவம் வரவேற்கும் வகையில் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விமானம், மெட்ரோ இரயில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்திற்கான வாகனங்களிலும் செஸ் போட்டிக்கான விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த போட்டி புதுப்பொலிவுடனும், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Prime Minister Modi will inaugurate the opening ceremony of Chess Olympiad today.

Share via