ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி-3 பேரிடம் விசாரணை

by Editor / 26-08-2022 09:12:56pm
ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி-3 பேரிடம் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு ஐஎப்எஸ் நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தது.

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஐஎப்எஸ் நிதி நிறுவனம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் கிளை அலுவலகம் திறந்து ஏஜென்ட் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்தது.

இதை நம்பிய பொதுமக்கள் இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில், சட்ட விதிகளுக்கு மீறி பொதுமக்களிடம் இருந்து ஐஎப்எஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு பெறுவதாக செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஐஎப்எஸ் நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்க தொடங்கினர்.

ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில்  மோசடி வழக்கில்  சரவணக்குமார், ஜெகநாதன், குப்புராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் போலீஸ் காவலில் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. சொகுசு கார்கள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணக்குமார், ஜெகநாதன், குப்புராஜ் ஆகியோரை கடந்த 24-ம் தேதி போலீஸ் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் சரவணக்குமாரிடம் இருந்து பல கோடி மதிப்பிலான 10 பதிவு செய்யப்பட்ட நில ஆவணங்களும், 4 பதிவு செய்யப்படாத நில ஆவணங்களும், காசோலை புத்தகம், 2 கம்ப்யூட்டர்கள், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜெகநாதன் குப்புராஜ் ஆகியோரிடம் இருந்து 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.போலீஸ் விசாரணை முடிந்து 3 பேரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

 

Tags :

Share via