தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு:  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

by Editor / 11-06-2021 07:12:59pm
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு:  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 

தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
* அனைத்துக் கடைகளும், குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
* கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்..

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via