சுங்கத் துறையிடம் மாட்டிய யூ டியூபர்

by Editor / 29-09-2021 09:43:29am
சுங்கத் துறையிடம் மாட்டிய  யூ டியூபர்

சுங்கத்துறை நடத்திய சோதனை ஒன்றில் பிரபல யூ டியூப் பக்கமான நாகை மீனவன் பக்கத்தை நடத்தி வந்த குணசீலன் சிக்கி இருக்கிறார். இவரின் படகில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யூ டியூபில் உள்ள பல்வேறு தமிழ் சேனல்களில் நாகை மீனவன் சேனல் பிரபலமானது. கடலில் மீன் பிடிக்கும் வீடியோ, கப்பலில் சமைக்கும் வீடியோ, பல்வேறு மீன் உணவுகளை சமைக்கும் வீடியோ என்று இவரின் சேனல் மிகவும் பிரபலம்.

குணசீலன் என்ற மீனவர் இந்த பக்கத்தை நடத்தி வந்தார். இவரின் வீடியோ பக்கம் மிகவும் பிரபலம். இவரின் பக்கத்திற்கு 687000 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் பல ஆயிரம் வியூஸ்களை அள்ள கூடியது.

இந்த நிலையில்தான் நேற்று கஞ்சா கடத்தல் வழக்கில் இவரின் படகு பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நாகப்பட்டினத்தில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று நாகப்பட்டினம் கடலோர பகுதிகளில் சோதனை செய்தனர். சுங்கத்துறை இணை ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு

நாகப்பட்டினம் துறைமுகம், கிச்சன்குப்பம், அக்கரைப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு இந்த சோதனை நடந்தது. இதில் படகு ஒன்றில் ஒரு கும்பல் பார்சல் ஏற்றுக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் அதை சோதனை செய்ய அருகில் சென்றனர். அப்போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து கும்பல் வேகமாக தப்பி ஓடியது.இதையடுத்து படகை சோதனை செய்த அதிகாரிகள் அதில் இருந்த மூட்டைகளில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

இந்த படகை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணையின் முடிவில் இது பிரபல யூ டியூப் பக்கமான நாகை மீனவன் பக்கத்தை நடத்தி வந்த குணசீலன் என்பவருக்கு சொந்தமானது என்று கண்டுபிடித்தனர். அவருக்கு சொந்தமான பைக்கும் அங்கு இருந்துள்ளது.அங்கிருந்து தப்பி ஓடிய குணசீலன் உள்ளிட்ட கும்பலை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். யூ டியூப் சேனல் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் மறைமுகமாக இவர் கஞ்சா கடத்தி வந்தது அம்பலம் ஆகியுள்ளது. இலங்கைக்கு இவர்கள் கஞ்சா கடத்த முயன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு சொந்தமான 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via