தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை வாய்ப்பு

by Editor / 21-10-2022 10:50:59am
 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இடி,மின்னலுடன் மழை வாய்ப்பு

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்பு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24ஆம் தேதிகளில் வலுவடையக்கூடும். தொடர்ந்து 25ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் (21-10-2022) வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 33 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

அக்டோபர் 21, 22, 23, 24, 25 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடைக்கிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via