‘புளூ டிக்’ கவுரவம் கிடைக்கணுமா..கட்டு 660 ரூபாய்.

by Editor / 02-11-2022 10:14:54am
‘புளூ டிக்’ கவுரவம் கிடைக்கணுமா..கட்டு 660 ரூபாய்.

 பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் வாங்கி அதன் உரிமையாளராகினார். இதன் தொடர்ச்சியாக எலான் மஸ்க் டிவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அந்த நிறுவனத்தில்மேற்கொண்டு வருகிறார். அவர் டிவிட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.

டிவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர். இது அவர்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டிவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டிவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டிவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து டிவிட்டர் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், எலான் மஸ்க் டிவிட்டரில், டிவிட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், பிரபலங்கள் மட்டுமல்லாது எந்தவொரு தனிநபரும் மாதாந்திர கட்டணத்தை செலுத்தி புளூ டிக் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புளூ டிக் வசதி வைத்திருப்போருக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்படும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via