கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் ...எடப்பாடி பழனிசாமி

by Staff / 15-11-2022 03:53:04pm
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு   ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க  வேண்டும் ...எடப்பாடி பழனிசாமி

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி மூட்டு வழி பிரச்னை காரணமாக, கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டு, இறுக்கமாக கட்டப்பட்டதாலும், அதிக நேரம் வைத்திருந்ததாலும், ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் இரத்த கட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆபத்தான நிலையில், கடந்த 8ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து பிரியா வரப்பட்டார். நவம்பர் 9ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ”அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via