விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது பொய்வழக்கு 4 முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் ரத்து

by Editor / 03-12-2022 07:56:19am
விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது  பொய்வழக்கு  4 முன்னாள் காவல் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் ரத்து

இஸ்ரோவின் விண்வெளி சாதனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் விகாஸ் என்ஜினை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் விஞ்ஞானி நம்பிநாராயணன். அவர் பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்றதாக 1994ம் ஆண்டு ஒரு விவகாரம் கிளம்பி நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள காவல்துறையினரால் தொடரப்பட்ட அந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு என பின்னர் சிபிஐ கூறியது. நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என உறுதி செய்தது. மேலும் நம்பிநாராயணனுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த பொய் வழக்கு போடப்பட்டதன் பின்னணி குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஒரு கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்தது.

அந்த கமிட்டியின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ, குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் உள்ளிட்ட 18 பேர் மீது நம்பிநாராயணன் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், கேரளாவின் முன்னாள் காவல் துறை அதிகாரிகள் எஸ்.விஜயன், தம்பி எஸ்.துர்கா தத் மற்றும் உளவுத்துறை முன்னாள் அதிகாரி பி.எஸ்.ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்த முன்ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.குமார் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ஆர்.பி.ஸ்ரீகுமார், எஸ்.விஜயன், தம்பி எஸ்.துர்கா தத், பி.எஸ்.ஜெயபிரகாஷ் ஆகிய 4 முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்துள்ளது. மேலும் அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கேரள உயர்நீதிமன்றம் மீண்டும்  விசாரிக்க உத்தரவிட்டது.   4 வாரத்திற்குள் இந்த விசாரணையை நடத்தி கேரள உயர்நீதிமன்றம் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 4 பேரையும் சிபிஐ கைது செய்வதற்கு 5 வாரங்களுக்கு இடைக்கால தடையும் விதித்து உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via