அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

by Admin / 24-07-2021 11:18:33pm
அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

பச்சைமலை,
கோபி வட்டம்,
ஈரோடு மாவட்டம்.

ஈரோடு மாவட்டம் கோபி நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைதான் மரகதகிரி எனப்படும் பச்சைமலையாகும். மரகதகல்லின் நிறம் பச்சை எனவே இப்பெயரைப் பெற்றது. வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலிக்கும் குழந்தை வடிவான இளம் குமரன்.

துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்கரம் ஸ்தாபித்ததால் மலையும், தெய்வமும் சிறப்பு பெற்றன. துர்வாச முனிவர் கோபமே உருவான சிறந்த தவசீலர். பொதிகை மலைக்குச் சென்று திரும்பும் வழியில் குன்னத்தூர் என்னும் ஊரை வந்தடைந்தார். அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு, தன் ஞான சிருஷ்டியால் தினமும் சிவபூஜை செய்ய உகந்த இடம் யாது எனக் கண்டார்.

அது அரசமரமும் நாக புற்றுக் கண்ணும் அமைந்த மொச்சூர் என்ற தலமாகும். தம் தவவலிமையால் பூஜைப் பொருட்களை வரவழைத்தார். இடியுடன் கூடிய மழையை பெய்விக்கச் செய்து சிறப்பான ஒரு சிவ பூஜையைச் செய்தார். குறை தீர்க்கும் குமரவேல் இல்லையே என வருந்தினார்.

அப்போது, முனிவரே உமது சிவபூஜையால் மகிழ்ந்தோம். எங்கள் இளைய குமாரன் இங்கிருந்து அரை காத தூரத்தில் மரகதவள்ளி என்ற தன் தாயின் நிறம் கொண்ட குன்றின் மேல் அருள்பாலிக்கிறார் நீ அந்த மரகதகிரிக்கு சென்று மேற்கு நோக்கி உள்ள இளம் குமரக் கடவுளைக் கண்டு தொழுது உமது பெயரால் ஒரு சக்கரம் ஸ்தாபித்து பூஜிப்பாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்டது. முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதன்படியே முனிவர், குறிப்பிட்ட இடத்திற்கு சென்று மானசீகமாக பூஜை செய்தார். பின் இறைவனை மனதில் இருத்தி தவம் மேற்கொண்டார். நாக வடிவில் இறைவன் முனிவர் முன் தோன்றி, உமக்கு யாது வரம் வேண்டும் எனக் கேட்டார்.

அதற்கு முனிவர், இறைவா நான் பூஜித்த இக்குன்று மரகதகிரி எனப் பெயர் பெற வேண்டும். தாங்கள் இளம் குமரனாக குழந்தை வடிவில் எழுந்தருளி அடியார்களின் குறைகளை தீர்க்க வேண்டும், நான் ஸ்தாபித்த சக்கரம் என்றும் பிரகாசமாக இருக்க வேண்டும். மந்திரம், எந்திரம், மூர்த்தி, சானித்யம், சூரியன், சந்திரன் உள்ளவரை இம்மலை சானித்யமாய் விளங்க வரமளிக்க வேண்டும் என வேண்டினார். அவ்வாறே ஆகுக.

கலியுகத்திலும் இம்மலையில் பல திருவிளையாடல்கள் செய்து அடியார் தம் குறைகளை தீர்த்தருள அனுக்கிரகம் செய்வோம் எனக்கூறி நாகம் மறைந்தது. முருகன் ஒருவனையே தன் இஷ்ட தெய்வமாக வழிபடும் அடியார் ஒருவர் இளங்குமரனை வணங்கி கொண்டிருந்தார். அப்போது கருவறையில் ஒரு ஜோதி தோன்றியது. நான் பல காலம் இங்கு தனிமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன்.

எத்தனையோ வசதி படைத்தவர்கள் இவ்வூரில்  இருந்தாலும் என்னைக் கவனிக்க ஆள் இல்லையே. இன்று முதல் என்னைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு என இளங்குமரன் இட்ட ஆணையை மானசீகமாக உணர்ந்து தொடரப்பட்ட ஒரு கால பூஜை படிப்படியாக உயர்ந்து இன்று தினமும் ஆறு கால பூஜை நடக்கும் அளவிற்கு வந்துள்ளது.

அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
 

Tags :

Share via