காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி

by Staff / 30-12-2022 01:22:17pm
காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி பலி

சிற்றார் சிலோன் காலனி சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி ஞானவதி (வயது 56). இவர் சிற்றார் அரசு ரப்பர் கழக கூப்பு எண் 42-ல் ரப்பர் பால் வெட்டும் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலையில் ஞானவதி வீட்டில் இருந்து கணவர் மோகன்தாசுடன் வேலைக்கு சென்றார். அந்த பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கணவன்-மனைவி இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் காட்டு யானை ஒன்று அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் இருள் சூழ்ந்து இருந்ததுடன் பனிப் பொழிவும் அதிகமாக இருந்ததால் யானை நின்றது ஞானவதிக்கு தெரிய வில்லை. ஞானவதி அருகில் வந்த யானை அவரை தாக்கி, தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் யானை அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததையடுத்து ஞானவதி உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஞானவதி யானை மிதித்து இறந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையாலுமூடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாவட்ட வன அதிகாரி இளைய ராஜாவும் அங்கு சென்றார். இதையடுத்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த யானையை விரட்டி அடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு யானை அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டது. பின்னர் ஞானவதியின் உடலை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட ஞானவதி உடலை அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடையாலு மூடுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து வன அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது சபரிமலை சீசன் நடந்து வருவதையடுத்து குமரி மாவட்ட வன பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோதை ஆறு வனபகுதிகளில் சமீபகாலமாகவே யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via