மதுரை, திருநெல்வேலி வழியாக எழும்பூர் - கொல்லம் இடையே மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில்

by Editor / 13-01-2023 09:31:39pm
மதுரை, திருநெல்வேலி வழியாக எழும்பூர் - கொல்லம் இடையே மேலும் ஒரு பொங்கல் சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரை, திருநெல்வேலி வழியாக சென்னையில் இருந்து கொல்லத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் (06081) சென்னை எழும்பூரில் இருந்து நாளை ஜனவரி 14 அன்று காலை 09.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 05.45 மணிக்கும் திருநெல்வேலிக்கு இரவு 09.05 மணிக்கும் வந்து சேர்ந்து நாகர்கோவில் டவுன் வழியாக ஜனவரி 15 நடுஇரவு 01.00 மணிக்கு கொல்லம் சென்று சேரும்.

இந்த ஒரு வழிப்பாதை ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

 

Tags :

Share via