கருத்துக் கேட்பு கூட்டமா திமுக கூட்டமா அண்ணாமலை கேள்வி

by Staff / 01-02-2023 01:47:57pm
கருத்துக் கேட்பு கூட்டமா திமுக  கூட்டமா அண்ணாமலை கேள்வி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த 25 ஆண்டு அமிர்த காலமாக இருக்கும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு அச்சானியாக இந்த பட்ஜெட் இருக்கும். 10 லட்சம் கோடிக்கும் மேலாக மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளனர். பொருளாதார வளர்ச்சி 6.8% இருக்கும் என கணித்து இருக்கிறார்கள். நம் நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சொல்ல உள்ளனர். நம் நாடு கோவிட் பிரச்னையில் இருந்து முழுமையாக வெளிவந்துள்ளது.

பொறுமையாக இருங்கள். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எல்லா தலைவர்களிடமும் பேசி வருகின்றோம். ஈரோட்டில் பத்தாயிரம் கொடுக்கலாமா அல்லது 20,000 கொடுக்கலாமா என்பதுதான் திமுக கூட்டணியில் பேச்சாக இருக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர், பத்தாயிரம் பேரை கொண்டு வந்து எந்த மண்டபத்தில் தங்க வைக்கலாம் என்பது பற்றி தான் பேசுகிறார்களே தவிர, மக்கள் பிரச்னை தீர்ப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொருத்தவரை அடுத்த ஒரு மாதத்தில் நாம் மறந்து விடுவோம். எங்களுடைய வேட்பாளர் அனைவருக்கும் பொதுவான வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. அரசியல் இயந்திரத்தை தவறாக பயன்படுத்துபவராக எங்களுடைய வேட்பாளர் இருக்கக் கூடாது. இடைத்தேர்தல் என்றாலே கண்டிப்பாக ஆளுங்கட்சி தான் வெற்றி பெறுகிறார்கள். பண பலத்தை வைத்து வெற்றி பெறுகின்றனர்.

13 மீன்பிடி கிராமங்கள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் பாதிக்கப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், இதற்கு இத்தனை முக்கியத்துவத்தை திமுக அரசு கொடுத்து வருகிறது. தமிழகத்தில் இந்த சிலை கலாச்சாரம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்து இது போன்று சிலை வைக்கிறார்கள்.

அரசு நடத்தியது கருத்துக்கேட்பு கூட்டமா அல்லது திமுக கட்சி கூட்டமா என்பது தெரியவில்லை. திமுக, அவர்களின் கட்சி பணத்தை செலவு செய்து அறிவாலயம் போன்ற இடங்களில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களில் அவர்கள் வைப்பது என்பது முறையல்ல. மக்களின் கருத்துகளை அவர்கள் மதிக்க வேண்டும். Ecological Sensitive Area எனத் தெரிந்தும் அந்த இடத்தில் அவர்கள் பேனா வைப்பதற்கு முனைப்பு காட்டுவது ஏன்? பேனா நினைவுச் சின்னம் விவகாரத்தில் நாங்கள் தமிழர்கள் பக்கம் கைகோர்க்கின்றோம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags :

Share via