மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு.

by Staff / 01-02-2023 05:16:48pm
 மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த அகிலா தமது மகன் மனோஜ்குமார் (14), இரண்டு மகள்களுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார். மனோஜ்குமார் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்த நிலையில் பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கோழி திருடுவது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்கள் இருந்ததால் தமது மகனை சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி அகிலா சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு போதை மறுவாழ்வு மையத்தில் மனோஜ்குமார் இரவு உணவு உட்கொண்ட பிறகு கழிவறையில் மயங்கி விழுந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் உயிரிழந்ததாக சிறுவனின் பெற்றோருக்கு போதை மறுவாழ்வு மையம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் தங்களது குழந்தையை அடித்து கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் போதை மறுவாழ்வு மையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐபிசி 174பிரிவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சோழவரம் காவல்துறையினர் போதை மறுவாழ்வு மைய நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்ட 4பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via