திருவள்ளுவர் சிலையை காண அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.

by Editor / 08-02-2023 09:37:55am
திருவள்ளுவர் சிலையை காண அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.


கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கடல் நடுவேயுள்ள இந்த இரண்டு  பாறைகளுக்கும் படகில் பயணிப்பது முக்கிய பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

கடல் உப்புக்காற்றால் திருவள்ளுவர் சிலை சேதமடையாமல் இருக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயனக் கலவை பூசப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. அதன்பின் இப்பணி நடைபெறவில்லை.  ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையின் மீது ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 6-ம் தேதி தொடங்கியதால் அன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

நவம்பர் மாதம் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை மற்றும் சூறைக்காற்றால் பணி தாமதமானது. சிலையில் கடல் உப்புப்படிமம் அகற்றப்பட்டு, கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி ஆகிய கலவையும், சிமென்ட் கலவையும் பூசப்பட்டன.ரசாயனக் கலவை பூச 145 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரத்தை பிரிக்கும் பணி நடந்து முடிந்த நிலையிலும்  இரசாயன கலவை பூசும் பணி முடிவுற்ற நிலையிலும் இன்னும் திருவள்ளுவர் சிலையை காண அனுமதி வழங்கபபடாமல் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் சிலையைகாண அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via