இந்து முன்னணியினர் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு- 5 மாவட்ட போலீசார் குவிப்பு.

by Editor / 19-02-2023 11:20:34am
இந்து முன்னணியினர் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு- 5 மாவட்ட போலீசார் குவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடையை முன்னிட்டு ஹைந்தவ சேவா சங்கம் வழக்கமாக நடத்தி வரும் 86 வது சமய மாநாட்டிற்கு தடை விதித்துள்ள அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்தும், மாசிக்கொடை நில குத்தகை வசூல் உரிமையை மாற்று மதத்தினர்க்கு விட்டு கொடுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணியளவில் மண்டைக்காட்டில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கோயில் நடை வாசல், பீச் சந்திப்பு, தெப்பக்குளம் மற்றும் லட்சுமிபுரம் சந்திப்பு, குளச்சல் காமராஜர் பேரூந்து நிலையம் அருகே  ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். தென் மாவட்டங்களிலிருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை டி. ஐ. ஜி. பிரவேஸ்குமார், குமரி மாவட்ட எஸ். பி. ஹரிஹிரண் பிரசாத் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். மேற்கூறிய பகுதியில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர். என்றாலும் தொடர்ந்து போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாசிக்கொடை திருக்கொடியேற்றம் வரும் மார்ச் மாதம் 5 ம் தேதி நடக்கும் முன்பே இப்போதே கேரள பக்தர்கள் மண்டைக்காடு வந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

 

Tags :

Share via