ஊராட்சி மன்ற தலைவி கொலை மிரட்டல் விடுவதால் பதவியை ராஜினாமா செய்ய 9 ஊராட்சி உறுப்பினர்கள் முடிவு.

by Editor / 03-04-2023 10:33:22pm
  ஊராட்சி மன்ற தலைவி  கொலை மிரட்டல் விடுவதால் பதவியை ராஜினாமா செய்ய  9 ஊராட்சி உறுப்பினர்கள் முடிவு.

மக்கள் நலத்திட்டங்கள் குறித்து புகார் அளித்தால் கொலை மிரட்டல் விடும் ஊராட்சி மன்ற தலைவி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக 9 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரபரப்பு புகார்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட களப்பாகுளம் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினராக உள்ள சந்திரன் என்பவரும், அவருடன் சேர்ந்து அதே ஊராட்சியில் கவுன்சிலராக உள்ள மற்ற எட்டு உறுப்பினர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.

அதாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற கவுன்சிலர்கள் ஒன்பது பேரும், தங்களது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள சிவசங்கரி என்பவர், தங்களது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு மக்கள் நலப் பணிகளையும் நிறைவேற்ற முன்வருவதில்லை எனவும், தாங்கள் ஏதேனும் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றித் தருவது குறித்த ஏதேனும் புகார் அளித்தால் தங்களை ஆள் வைத்து கொலை மிரட்டுவதாகவும், ஆகவே ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள சிவசங்கரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், களப்பாகுளம் ஊராட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 அதேபோல், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவிட்டால் தாங்கள் 9 கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 இந்த மனுவினைப் பெற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் மனு மீதான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை ஏற்பதாக உறுதி அளித்தார்.

 

Tags :

Share via