கேரளாவில் மேலும் 14 பேருக்கு  ஸிகா வைரஸ் பாதிப்பு

by Editor / 09-07-2021 07:15:26pm
கேரளாவில் மேலும் 14 பேருக்கு  ஸிகா வைரஸ் பாதிப்பு


 

கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஸிகா வைரஸ் கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் ஆவர். ஸிகா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தங்கியிருந்த கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டது. 
இந்த பரிசோதனை முடிவுகள்  வந்துள்ளது. இதில் 14 பேருக்கு தற்போது ஸிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸிகா வைரஸ் கொசுக்களின் மூலம் பரவுவதால் வெளியிடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு குறையாத நிலையில் நேற்று முதல்முறையாக ஸிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 19,000ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. ஜூலை மாதத்தில் கடந்த 5ஆம் தேதி தவிர பிற நாட்களில் சராசரியாக 12,000 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில் கேரளாவில் முதல் முறையாக 24 வயது பெண் ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக எல்லையோர பகுதியான பாறசாலையை சேர்ந்த அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட போது ஸிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு மையத்தில் ஆய்வு செய்த போது ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண்ணும் குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தாயார் உள்ளிட்ட 30 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதில் தற்போது மேலும் 14 பேருக்கு ஸிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 

Tags :

Share via