கொசுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபடும் பேராசிரியர் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ரூ.67 லட்சம் நிதியுதவி

by Editor / 07-04-2023 08:00:33am
 கொசுக்கள் குறித்த ஆய்வில் ஈடுபடும் பேராசிரியர் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ரூ.67 லட்சம் நிதியுதவி

தருமபுரி அடுத்த பைசுஅள்ளியில், சேலம் பெரியார் பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் முனைவர் காமராஜ். இவர், மலேரியா பரப்பும் கொசுக்கள் மீதான பல்வேறு பருவகால மற்றும் புவியியல் மாறுபாடுகளின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆய்வை மேம்படுத்த, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) சார்பில் ரூ.67 லட்சம் நிதி நல்கை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், உலக அளவில் தொற்று நோய்களை கொசுக்கள் தான் அதிகமாக பரப்புகின்றன. அதேபோல, கொசுக்களின் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் நோய்க்கிருமி பரவுதலுடன் தொடர்புடையவையாக உள்ளன. கொசுக்களில் குறிப்பாக மலேரியாவை பரப்பும் குடல் நுண்ணுயிர் மற்றும் நோய்க்கிருமி தொடர்பு பற்றிய ஆராய்ச்சி இந்தியாவில் மிகக்குறைவாகவே உள்ளது. அண்மைக்கால ஆய்வுகளில், அடர் வனப்பகுதியில் உள்ள கொசு வகைகளில், நோய்த் தொற்றைக் குறைக்கும் பாக்டீரியாவான ‘பிளாஸ்மோடியம்’ இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் தற்போது மேற்கொண்டு வரும் ஆய்வானது, மலேரியா பரப்பும் கொசுக்கள் மற்றும் நோய் பரப்பாத கொசுக்களுக்கு இடையிலான உயிரியல் உறவையும் நோய் பரவுவதை நோக்கிய அவற்றின் நுண்ணுயிர் தொடர்புகளைப் பற்றியும் ஆராய்வதை குறிக்கோளாக கொண்டதாகும். இந்த ஆராய்ச்சி, அசாம் மாநிலத்தில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன்(ஆர்எம்ஆர்சி) இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்திய அரசின் இவ்வாராய்ச்சி நிதி நல்கை பெற்றுள்ள உதவிப் பேராசிரியர் காமராஜுக்கு சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன், பதிவாளர் முனைவர் தங்கவேல் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேபோல, தருமபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர்(பொ) முனைவர் மோகனசுந்தரம் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via