திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் சித்திரை விசு திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி.

by Editor / 09-04-2023 11:59:03am
திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் சித்திரை விசு திருவிழா  தேரோட்ட நிகழ்ச்சி.

திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் சித்திரை விசு திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிக்கரையில் அமைந்துள்ளது திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவில்.இந்த திருக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை விசு திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான சித்திரை விசு திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், ஐந்தாம் நாளான இன்று திருத்தேர் பவனி உலா  நடைபெற்றது.  குற்றாலநாதர்,குழல் வாய் மொழியமை, முருகர், விநாயகர் ஆகிய 4 சுவாமிகள் அடங்கிய நான்கு தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

குற்றாலம் பேரருவி அருகே உள்ள ரத வீதியில் நடைபெற்று வரும் இந்த திருதேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குற்றாலத்திற்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த திருத்தேராட்டத்தில் பங்கேற்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வருகிற 7-ஆம் திருநாளான 11-ஆம் தேதியன்று அருள்மிகு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12-ஆம் தேதி அரிய வகை மூலிகைகளால் வரையப்பட்ட சித்திரை சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via