பாளை சிறையிலிருந்து பாஜக-காங்.நிர்வாகிகள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

by Editor / 11-04-2023 08:44:49am
பாளை சிறையிலிருந்து பாஜக-காங்.நிர்வாகிகள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம். பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள பா. ஜனதா அலுவலகம் வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். அவர்கள் மாவட்ட பா. ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் பா. ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பா. ஜனதா கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பினரும் மாறி, மாறி கல்வீசி தாக்கினர். மோதலில் 2 கட்சிகளையும் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் 31 பேர் மீதும், பா. ஜனதா உறுப்பினர்கள் 22 பேர் மீதும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பா. ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் மற்றும் ஜெலின் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பா. ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இருதரப்பு வக்கீல்களும் கைது செய்யப்பட்ட 6 பேரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம்  நேற்று பா. ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட பா. ஜனதா, காங்கிரஸ் நிர்வாகிகள் மொத்தம் 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரே நேரத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருந்து ஜாமினில் வெளியே வரும்போது இரண்டு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாளை சிறையிலிருந்து பாஜக-காங்.நிர்வாகிகள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
 

Tags :

Share via