யோகாவில் 29 புதிய உலக சாதனைக்காக    கண்ணை மூடிக்கொண்டு  கடின  ஆசனங்களை செய்து அசத்திய நெல்லை சிறுமி

by Editor / 24-07-2021 04:27:35pm
யோகாவில் 29 புதிய உலக சாதனைக்காக    கண்ணை மூடிக்கொண்டு  கடின  ஆசனங்களை செய்து அசத்திய நெல்லை சிறுமி

 

நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா (11). இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி பிரிஷா யோகா மீது உள்ள ஆர்வத்தால் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு கடினமான யோகா ஆசனங்களை செய்து வருகிறார்.

இதன் பலனாக சிறுமி பிரிஷா இதுவரை 41 உலக சாதனைகள் புரிந்து சாதனை படைத்துள்ளார்.மேலும் உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை மத்திய அரசின் என்.சி.பி.ஆர் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. அதேபோல் உலகின் முதல் இளம் கௌரவ டாக்டர் பட்டத்தை நியூஜெருசேலம் பல்கலைக்கழகம் சிறுமி பிரிஷாவுக்கு வழங்கியுள்ளது. இதுபோன்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள பிரிஷா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ காரணமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கிறார். 


அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இவரின் திறமையை கண்டு வியந்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிசயத்தக்க தனித்திறமை உள்ள குழந்தை என்று சிறுமி பிரிஷாவை பாராட்டியிருந்தார். இதுபோன்று சாதனைகளின் மகுடமாய் திகழ்ந்து வரும் சிறுமி பிரிஷா தற்போது யோகாவில் 29 புதிய உலக சாதனை படைப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு 29 கடின ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார். அதாவது அமெரிக்காவிலுள்ள எலைட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் பிரிஷா பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இதில் மனோன்மணியம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சேது, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியதுரை மற்றும் சிவராமன் ஆகியோர் முன்னிலையில் சிறுமி பிரிஷா 29 ஆசனங்களை செய்து காட்டினார். அதன்படி கண்களை கட்டிக்கொண்டு கபோடாஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூப் சரிசெய்வது, கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிவேகமாக பிரைன் விட்டாவை சரி செய்வது, கண்களை கட்டிக் கொண்டு விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் பிரைன் விட்டாவை அதிவேகமாக சரி செய்வது, கண்களை கட்டிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் கையால் அதிவேகமாக சைக்கிள் ஓட்டுவது, கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கையில் தரையில் தட்டுவது உள்ளிட்ட 29 கடினமான ஆசனங்களை செய்து யோகாவில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் உலக சாதனைக்காக எலைட் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை விட சிறுமி பிரிஷா இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆசனங்களையும் செய்துள்ளார்.

பிரிஷாவின் இந்த சாதனைகளின் வீடியோ ஆவணங்கள் எலைட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் யோகாவில் புதிய உலக சாதனை படைத்த முதல் சிறுமி என்ற பட்டத்தை எலைட் நிறுவனம் பிரிஷாவுக்கு வழங்க இருக்கிறது. உலக அளவில் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு யோகாவில் இதுபோன்று கடினமான ஆசனங்களை யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த சாதனைகளை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிப்பதா பிரிஷா பெருமிதம் தெரிவித்தார்.

டாக்டர். K. பிரிஷாவின் சாதனைகள்
பிரிஷா (வயது 11). திருநெல்வேலியில் மீனா சங்கர் வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
பிரிஷா 41 உலக சாதனைகள் யோகாசனம் மற்றும் நீச்சலிலும் புரிந்துள்ளார்.


பிரிஷா உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. உலகின் முதல் கௌரவ டாக்டர் என்ற பட்டத்தை நீயூஜெருசலேம் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்து உள்ளது.


பிரிஷா உலகின் முதல் அதிக உலக சாதனைகள் புரிந்தவர் என்ற பட்டத்தை குளோபல் பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது.
இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் யோகா வகுப்பு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் எயிட்ஸ் ஹோம், முதியோர் இல்லம், பார்வையற்ற மாணவர்கள் பள்ளி, புதுச்சேரி, தமிழ்நாடு NCC மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இவர் தினமும் பள்ளி வகுப்பு முடிந்தவுடன் பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கும் சென்று பார்வையற்றவர்களுக்கு இலவசமாக யோகாசனங்கள் கற்பிக்கிறார். தன்னுடைய கடினமான தீவிர பயிற்சியின் மூலம் 12 வயது கணேஷ்குமார் என்ற பார்வையற்ற மாணவர்க்கு யோகாசனம் பயிற்றுவித்து முந்தைய சாதனையை முறியடிக்க செய்துள்ளார். யோகாவில் உலகின் முதல் பார்வையற்ற உலக சாதனையாளர் கணேஷ்குமார் ஆவார்.


 இவர் மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.


முன்னாள் பாண்டிச்சேரி லெப்டினட் கவர்னர் திருமதி. கிரண்பேடி அவர்கள் பிரிஷாவை "அதிசயத்தக்க, தனித் திறமை உள்ள குழந்தை" என்று பலமுறை பாராட்டி பிரிஷாவின் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிஷா "யோகா- செய்வோம் இன்பம் பெறுவோம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் சூரிய நமஸ்காரம், ப்ராணாயாமம், எளிய ஆசனங்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா முதலிய நோய்களை தவிர்க்கும் ஆசனங்கள் மற்றும் நோய் வந்த பின் செய்ய வேண்டிய  ஆசனங்களை தானே செய்து காட்டிய படங்களுடன் செய்முறைகள்  பயன்களை மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை "இந்தியா பிரைம் அவார்டு"க்கு தேர்வு செய்துள்ளனர்.நேஷனல் யூத் Festival  2020-21 மத்திய அரசின் யோகா போட்டியின் நடுவராக பங்கேற்றார்.


யோகா ராணி, யோகக் கலா, யோகஸ்ரீ, யோக ரத்னா, ஆசன ஸ்ரீ, லிட்டில் யோகா ஸ்டார், பாரதி கண்ட புதுமைப்பெண், அன்னை தெரசா விருது, சக்சஸ் விருது, அப்துல்கலாம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, அமைதிக்கான விருது, இளம் சாதனையாளர் விருது, 2016, 2017 ,2018, 2019,2020, 2021 போன்ற விருதுகளையும், பட்டங்களையும், சான்றிதழ்களையும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி பிரிஷாவை கௌரவப்படுத்தி உள்ளனர்.

திருநெல்வேலியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை  அமைச்சகம், நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசனம் போட்டிகளில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவ படுத்தினர். போட்டித் தேர்வுகளில் பிரிஷா பற்றி படித்து வருகின்றனர். இந்த சர்வதேச பெரும் பரவும் கொரோனா தொற்று நோய் சூழ்நிலையிலும் ஏழை மாணவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார்.


1.கண்களை கட்டிக்கொண்டு கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூபை சரி செய்வது.
 2.கண்களை கட்டிக்கொண்டு வாம தேவ ஆசனத்தில் அதிவேகமாக ப்ரைன் விட்டாவை சரிசெய்வது.
 3.கண்களை கட்டிக்கொண்டு விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் ப்ரைன் விட்டாவை அதிவேகமாக சரிசெய்வது.
4. கண்களை கட்டிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் கையால் அதி வேகமாக சைக்கிள் ஓட்டுவது.
 5.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்ட ஆசனத்தில் கால் கட்டைவிரல் சொடக்கு போடுவது.
6. கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்ட ஆசனத்தில் கால் கட்டை விரல்,சுண்டு விரலில் பிரைன் ஜிம் செய்வது.
 7.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் ஒரு கையால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஹுல்லா ஹூப்ஸ் சுற்றுவது.
 8.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் பந்த சக்கராச னத்தில் கை விரல் இடுக்கில் கத்தியால் குத்துவது.
 9.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் கண்ட பேருண்டா சனத்தில் கை கட்டை விரல், சுண்டு விரலில் பிரைன் ஜிம் செய்வது.
10. கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் விபரீத சலபாசனத்தில் ஆரஞ்சு பழங்களை கிண்ணத்தில் வைப்பது.
 11.கண்களை கட்டிக்கொண்டு ஏகபாத வாமதேவ, வாம ஹஸ்த கண்ட பேருண்டா சனத்தில் அதிவேகமாக பிரைன் விட்டா சரி செய்வது.
 12.கண்களை கட்டிக்கொண்டு கப்போடா ஆசனத்தில் அதி வேகமாக Brainvita சரி செய்வது.
13. கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கை தரையில் தட்டுவது.
14.கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் அதிவேகமாக ரூபிக்ஸ் கியூப் சரிசெய்வது.
 15.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் வாம தேவ ஆசனத்தில் வேறு நபரின் விரலிடுக்கில் கத்தியால் குத்துவது.
 16.கண்களை கட்டிக்கொண்டு 30 நொடிகள் விபரீத கண்ட பேருண்டா சனத்தில் வேறு நபரின் விரலிடுக்கில் கத்தியால் குத்துவது.
17. கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் நிர்லம்ப பூர்ண சக்ராசனத்தை அதிக எண்ணிக்கைகள் செய்வது. 
 18.கண்களை கட்டிக் கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் அதிக வார்த்தைகளை படித்துக்கொண்டே ரூபிக்ஸ் க்யூப் சரிசெய்வது.
 19.கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் pyra minx சரி செய்து கொண்டே அதிக வார்த்தைகள் படிப்பது.
 20.கண்களை கட்டிக் கொண்டு 2 நிமிடங்கள் வாம தேவ ஆசனத்தில் ரூபிக்ஸ் க்யூப் சரி செய்து கொண்டே அதிக வார்த்தைகள் படிப்பது.
 21.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் வாம தேவ ஆசனத்தில் அதிக எண்களை  இரு கைகளாலும் எழுதுவது. 
22.கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடம் வாம தேவ ஆசனத்தில் அதிக எண்ணிக்கை விளையாடும் அட்டை கண்டுபிடித்தல். 
23.கண்களை  கட்டிக் கொண்டு ஒரு நிமிடம்      ஸ்கேட்டிங்கில் கட்டை விரல், சுண்டு விரலில் பிரைன் ஜிம் பயிற்சி செய்தல்.
 24. கண்களை கட்டிக்கொண்டு 5 நிமிடங்கள் அதிக பொருட்களை கண்டுபிடித்தல். 
26.கண்களை கட்டிக்கொண்டு அதிக நேரம் விருட்சக ஆசனத்தில் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தல்.
27.கண்களை கட்டிக்கொண்டு அதிக நேரம் விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தல்.
28.கண்களை கட்டிக்கொண்டு அதிகநேரம் விபரீத சக்ர பந்த ஆசனத்தில் புத்தகத்தை பின்நோக்கி படித்தல்.
29.கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடம் அதிக வளைவு தன்மையுள்ள ஆசனங்களை செய்தல்.


இந்த 29 உலக சாதனைகளை எலைட் வேல்டு ( Elite world Record )ரெக்கார்டில் 2021 ஜூலை 7ம் தேதி மாலை நிகழ்த்தினார்.

 

Tags :

Share via