ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு

by Staff / 27-04-2023 12:33:41pm
ஆன்லைன் சூதாட்ட தடை  சட்டத்தை எதிர்த்து வழக்கு

தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வந்த ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை செல்லாது என அறிவித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, புதிய சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.
இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு இயற்றபட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 2023 மார்ச் 8ம் தேதி திருப்பி அனுப்பினார்.அதன் பின் மார்ச் 23ம் தேதி இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஏப்ரல் 7ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்ததார்.

இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.அந்த மனுவில், தமிழக அரசின் தடை சட்டத்தால் தங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி மத்திய அரசின் தகவல் தொழிட்நுட்பத்துறை ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தும் வகையில் திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் கண் பார்வை குறைவு, நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கபடுவதாக சட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ள நிலையில், இதுசம்பந்தமாக அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்றும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.எந்த ஆதாரங்களும் இல்லாமலும், அடிப்படையும் இல்லாமலும், பொது ஒழுங்கைச் சுட்டிக்காட்டி, இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தமிழக அரசிற்கு தகுதி இல்லை எனவும், உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மீண்டும் இயற்றி உள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.திறமைக்கான விளையாட்டுக்கும், வாய்ப்பிற்கான விளையாட்டிற்குமான வேறுபாட்டை விளக்காமல் அனைத்து ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை விதிக்கபட்டது சட்டவிரோதமானது எனவும் கூறப்பட்டுள்ளது.ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை சூதாட்டமாக வகைபடுத்தியது தன்னிச்சையானது என்பதால், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via