பாதிரியார் பெயரை கூறி முகநூல் மூலம் ரூ. 70 ஆயிரம் மோசடி

by Staff / 01-05-2023 02:44:26pm
பாதிரியார் பெயரை கூறி முகநூல் மூலம் ரூ. 70 ஆயிரம் மோசடி

குளச்சல் அருகே வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 52). மாற்றுத்திறனாளி. இவரது உறவினர் ஜூலியஸ் டெல்லியில் ஒரு ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவாராம். இந்த நிலையில் பாதிரியார் ஜூலியஸின் முகநூல் மூலம் ஜேம்சுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ. 40 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ஜேம்ஸ், மர்ம நபர் அனுப்பிய வேறு ஒரு நபரின் 'கூகுள் பே' செல்போன் எண்ணிற்கு ரூ. 40 ஆயிரம் அனுப்பி வைத்தார்.பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் மீண்டும் வேறு உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதுவும் உண்மை என்று நம்பிய ஜேம்ஸ் மீண்டும் 3 தவணையாக ரூ. 30 ஆயிரம் அனுப்பி வைத்தார்.மொத்தம் ரூ. 70 ஆயிரம் அனுப்பி வைத்த பின்பு பாதிரியார் உண்மையான முகநூல் தளத்திலிருந்து ஜேம்ஸிற்கு 'எனது முக நூல்'தளத்தை யாரோ? பயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதனால் ஜேம்ஸ் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து குளச்சல் போலீசில் ஜேம்ஸ் புகார் செய்தார். இந்த புகார் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ. 70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மாற்றுத்திறனாளியிடம் போலி முகநூல் தளம் மூலம் பணம் பறித்த சம்பவம் வாணியக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via