விஜய்க்கு துணைநிற்பேன்"-சீமான்

by Admin / 15-07-2021 05:48:49pm
விஜய்க்கு துணைநிற்பேன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்த்திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் விஜய், 2012ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய காருக்கு செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல. நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத்தீர்ப்பு என்பது விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல.அத்தீர்ப்பு வந்தது முதல் விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப்போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக்கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது. விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரிஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை.

அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கெதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.பா.ஜ.,வின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும். தான் வாங்கிய காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது. தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும்.கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் ஆட்சிமுறைகளைச் சாடி, திரைப்படங்களில் விஜய் கூறிய கருத்துக்களுக்காக, தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, அவரைப் பழிவாங்கத் துடிப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாகும். அதனை முறியடிக்கவும் அவதூறு பரப்புரைகளையும், மறைமுக அழுத்தங்களையும் எதிர்கொண்டு மீண்டுவரவும் அவருக்குத் துணைநிற்பேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via