தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து..?

by Editor / 27-05-2023 09:33:31pm
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து..?

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி தமிழகத்தில் 3 கல்லூரிகளுக்கு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதன் மூலம், தலா 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்ப பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.


இதனை எதிர்த்து, தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மிகப் பழமை வாய்ந்த மருத்துவமனைகளாகும். திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகச் சிறப்பான பணியினை ஆற்றிக் கொண்டு உள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் சிறிய குறைகறான சிசிடிவி கேமராக்கள் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இல்லை என்ற குறை சொல்லி உள்ளனர். இந்த குறைகளையும், பழுதடைந்த சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரி செய்து விடுவோம்.
ஆனால், இதற்கு மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கிறது.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு வருவதாலும், அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை கடுமையானது. அளவுக்கு அதிகமானது. தேவையற்றது. தமிழகத்தின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயம் அல்ல. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 3 மருத்துவக் கல்லூரிகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள குறைகளை உடனடியாக சரி செய்து இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

 

Tags :

Share via