அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

by Staff / 13-08-2023 03:26:57pm
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து, கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை முடித்துக் கொண்ட அமலாக்கத் துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு, சிஐஎஸ்எஃப் போலீஸார் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர்.மெலிந்த தேகத்துடன், தாடியுடன் இருந்த செந்தில் பாலாஜி காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து, முதல் மாடியில் உள்ள நீதிமன்றத்துக்கு லிஃப்ட் மூலமாகச் சென்றார்.

செந்தில் பாலாஜியிடம் நீதிபதி, "விசாரணையின்போது அமலாக்கத் துறையினர் உங்களை எப்படி நடத்தினார்கள், அவர்களுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு இருக்கிறதா? " என்று கேட்டார். அதற்கு அவர், விசாரணையின்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தவில்லை என்றும், நன்றாக நடத்தினார்கள் என்றும், அவர்கள் மீது குறைகூற ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், வழக்கு தொடர்பான சுமார் 3, 000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஓர் இரும்புப் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ். அல்லி, வரும் 25-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
 

 

Tags :

Share via