இஸ்ரோ தேர்வில் செல்போன், ப்ளூடூத் பயன்படுத்தி காப்பியடித்த இரண்டு பேர் கைது:

by Editor / 22-08-2023 10:19:58pm
 இஸ்ரோ தேர்வில் செல்போன், ப்ளூடூத் பயன்படுத்தி காப்பியடித்த இரண்டு பேர் கைது:

திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்ளது. இந்த மையத்தின் தொழில்நுட்பப் பிரிவு பணியாளருக்கான தேர்வு நேற்றுமுன்தினம் பல்வேறு மையங்களில் நடந்தது.  இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை திருவனந்தபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது.

அதில் பேசியவர், இஸ்ரோ தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் காப்பியடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். போலீசார் உடனடியாக தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.இதில் காட்டன்ஹில், செயின்ட் மேரீஸ் பள்ளியில் தேர்வு எழுதிய 2 பேர் செல்போன், ப்ளூடூத் மூலம் காப்பியடித்ததை கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் 2 பேரும் காப்பியடித்தது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் மறைத்து வைத்திருந்த செல்போன், ப்ளூடூத் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். ஹால் டிக்கெட்டில் இருந்த விவரப்படி 2 பேரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் (26), சுமித் குமார் (25) என்பது தெரியவந்தது.

தீவிர விசாரணையில் 2 பேரும் ஆள்மாறாட்டம் செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் விமானத்தில் வந்து தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிந்து விமானத்திலேயே அரியானா திரும்பவும் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த 3 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் காப்பியடித்தது எப்படி என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.2 நபர்களும் தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக இடுப்பில் செல்போனை வைத்து அதன் மேல் ஒரு பெல்ட்டை கட்டி உள்ளனர். செல்போன் கேமராவை ஆன் செய்து அதை சட்டை பட்டன் துளைக்கு நேராக தெரியும்படி வைத்துள்ளனர்.

வினாத்தாள் கிடைத்தவுடன் அதை செல்போன் கேமராவில் தெரியும்படி சற்று தூக்கி பிடிப்பார்கள். அது மறுமுனையில் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் நபருக்கு டீம் வியூவர் ஆப் மூலம் தெரியும். ஏற்கனவே தேர்வு எழுதும் நபர்களின் செல்போனும் மறுமுனையில் இருப்பவரின் செல்போனும் டீம் வியூவர் ஆப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

தேர்வு எழுதும் நபர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் காதில் மிகச் சிறிய ப்ளூடூத்தையும் பொருத்தி இருந்தார். மறுமுனையில் இருக்கும் நபர்கள் விடைகளை சொல்லச் சொல்ல ப்ளூடூத் மூலம் கேட்டு 2 பேரும் உடனுக்குடன் விடைகளை எழுதிக் கொண்டிருந்தனர். போலீசார் ஏற்கனவே உஷார் படுத்தியிருந்ததால் கண்காணிப்பாளர்கள் திறமையாக செயல்பட்டு 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அதற்குள் மொத்தமுள்ள 80 மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்கள் வரை 2 பேரும் சரியாக விடைகளை எழுதி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : isro exam

Share via