9 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

by Staff / 31-08-2023 01:18:53pm
 9 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திண்டிவனம் அருகே உள்ள கீழ்மாவிலங்கை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் பதுக்கி வைத்து பெட்டிக்கடை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று தகவல் கிடைக்கப்பெற்ற வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரும், அதேஊரில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம்(வயது 37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 42 மூட்டைகள் பறிமுதல் விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒரத்தி கிராமத்தை சேர்ந்த புகையிலை பொருட்கள் மொத்த வியாபாரியான வெங்கடேசன்(48) என்பவரிடம் புகையிலை பொருட்கள் உள்ள மூட்டைகளை வாங்கி வந்து பெட்டிக்கடையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஒரத்தியில் உள்ள வெங்கடேசன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 40 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 வீடுகளில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கொண்ட 42 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via