சூழலை மாசுபடுத்தும் ஆலை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

by Staff / 04-09-2023 04:51:52pm
சூழலை மாசுபடுத்தும் ஆலை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' ஆலைக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி, வார்டு 3க்கு உட்பட்ட அம்பேத்கர் சாலை, அர்ச்சனா பேக்கரி பின்புறம், கடந்த ஆண்டு துவக்கப்பட்ட, 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' ஆலைக்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலை மூடப்பட்டது.இந்நிலையில், அதே பகுதியிலுள்ள பாக்யலட்சுமி நகர், முதல் தெருவில் புதிதாக ஒரு 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' ஆலை, அப்பகுதி தி. மு. க. , முக்கிய புள்ளி ஒருவரால் கட்டப்பட்டு, விரைவில் உற்பத்தியை துவக்க உள்ளது. இந்த ஆலையால் சுற்றுப்புற சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, மாசு கட்டுப்பாடு வாரியம், ஆலை துவக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, பகுதி மக்கள் ஒன்றிணைந்து, சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளரான தி. மு. க. , பிரமுகரிடம் முறையிட்டனர். அவர் செவிசாய்க்கவில்லை. எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via