ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம்

by Editor / 26-07-2021 04:00:18pm
 ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டம்



ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


ஆஸ்திரேலியாவின் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு இல்லாத நிலை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய 3 மாகாணங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த ஆஸ்திரேலிய மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனிடையே போலீசார் போராட்டத்தை கலைக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி தண்ணீர் பாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்தனர். இதில் போலீஸ் அதிகாரிகள் பலர் படுகாயமடைந்தனர். அதேபோல் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தபோது நடந்த தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர்.


கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 500க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனா். இந்த போராட்டங்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் 21.8% பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

 

Tags :

Share via