மகாளய அமாவாசை தினத்தையொட்டி புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. 

by Editor / 14-10-2023 08:21:22am
மகாளய அமாவாசை தினத்தையொட்டி புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. 

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது இந்துக்களின் புனித கடமையாக கருதப்படுகிறது. குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசையிலும் நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக அமாவாசை நாளன்று அதிக அளவில் மக்கள் தர்ப்பணம் செய்வர். மேலும் மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மகாளய அமாவாசையில் பித்ருக்கள் நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யும் தர்ப்பணங்களை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம். தை அமாவாசை என்பது பித்ருக்கள் நமக்கு ஆசி வழங்கி விட்டு, மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்லும் காலமாகும். இன்றைய தினம் புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தையொட்டி

தென்காசி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் குற்றாலம் பேரருவியில்  நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குற்றாலநாத சுவாமியை வழிபட்டனர்.


ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில், பிதுர்கர்மா பூஜை செய்திடும் வழிபாடுகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இராமநாதசுவாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


நெல்லை மாவட்டம், பாபநாசம் பாவநாத சுவாமி கோவிலில் அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள், தாமிரபரணி நதிக்கரையில் நீராடினர். தொடர்ந்து அவர்கள்,முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி, வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து வைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியுற்றனர்.

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசையை யொட்டி பொதுமக்கள் திதி தர்ப்பண வழிபாடுகளை மேற்கொண்டனர்.ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலை, தேங்காய் பழம் உள்ளிட்ட பொருட்களுடன் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தைப்பூசி காவேரி படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி பச்சரிசி, வெல்லம், எள்ளு, பழம், காய்கறிகள் என படையலிட்டு வழிபட்டனர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வைகையாறு, காஞ்சிபுரத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோயில் குளங்களில், புதுச்சேரி கடற்கரைகளிலும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து சிறப்பு பூஜை நடத்தி அவர்களை வழிபட்டனர். மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதால் நீர்நிலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags : மகாளய அமாவாசை

Share via