திருமண தடையா..? நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வாங்க!

by Editor / 01-08-2021 04:21:03pm
திருமண தடையா..? நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வாங்க!

 


திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் இருக்கும் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில், நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் கோயிலாக உள்ளது.
ஆந்திர மாநிலம், குத்திபல்லாரி என்ற இடத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்தபோது ஏற்பட்ட இரத்த கறைகளை, அஹோபிலத்தில் சுத்தம் செய்தார்.
மிகுந்த கோபத்துடன் இருந்த நரசிம்மர் அங்கிருந்து, தெற்கு நோக்கி பயணித்து, திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்துள்ள தீண்டாக்கல் வந்தபோது, சிவபெருமானும், தேவர்களும் வழிமறித்து கோபம் தணிக்க முயற்சித்தனர்.
ஆனால், அதில் சாந்தமடையாத நரசிம்மர், கரூர் மாவட்டம் தேவர்மலையை அடைந்தபோது பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று கோபம் தணிந்தார்.பின்னர் தேவர்மலை தீர்த்தத்தில், அங்கங்களை சுத்தம் செய்து சாந்தமடைந்தார் என்றாலும் இத்தலத்தில் சுவாமி உக்கிரநரசிம்மராக கோயில் கொண்டுள்ளார்.
சாந்தமடைந்த நரசிம்மர், திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூருக்குச் சென்று கருணாகிரி நரசிங்கப் பெருமாளாக எழுந்தருளினார்.கோபம் தணிந்த பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ ராமகிரி தலத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடைபெறும்.

தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி மற்றும் பணவரவு ஏற்படும்.இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று ஜாதக தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுகம் உண்டாகும்.கோயிலின் வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நைவேத்தியம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும்.
இங்குள்ள பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து வணங்கினால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி வாழ்வில் சுகம் உண்டாகும்.
ஆர்.சிவா 

 

Tags :

Share via