சங்கரன்கோவிலில்  விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி மௌன ஊர்வலம் 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு

by Editor / 10-03-2024 10:03:21pm
சங்கரன்கோவிலில்  விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி மௌன ஊர்வலம் 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்,  விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 14 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.  மேலும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் நேற்று  மாலை விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 4-ம் தெருவில் இருந்து தொடங்கிய மௌன ஊர்வலம் கீதாலயா தியேட்டர் ரோடு ராஜபாளையம் சாலை திருவேங்கடம் சாலை வழியாக பாடாப்பிள்ளையார் முன்பு மௌன ஊர்வலம் நிறைவடைந்தது.  இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் மகாலெட்சுமி தலைமை வகித்தார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் சுகந்தி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரத்தினவேல், துணை தலைவர் சக்திவேல், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மாணிக்கம், சங்கரன்கோவில் நகர செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 14 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

 

Tags : சங்கரன்கோவிலில்  விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி மௌன ஊர்வலம் 10 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிப்பு

Share via