டெல்லி காவல்துறை எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை. 

by Editor / 07-04-2024 08:15:15am
டெல்லி காவல்துறை எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை. 

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் போலி விசா மூலம் வெளிநாட்டில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்தனர். அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  

இதில் மேலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்தது. இதையடுத்து அவரிடம் விசாரிக்க டெல்லி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மந்தீப் சிங் மற்றும் காவலர்கள் சிபின் மாத்தாய் ஆகியோர் மேலூர் வந்தனர்.இந்த வழக்கில் மனோகரனை கைது செய்யாமல் இருக்க மனோகரனிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். 

இதில் முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் தரும்படியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவர் மதுரை சி.பி.ஐ. காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய 50 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை டெல்லி காவல்துறை எஸ்ஐ  மந்தீப் சிங்கிடம் மனோகரன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த 2008-ம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டர் மந்தீப் சிங்குக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில மந்தீப்சிங் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடியானது. பின்னர் தன் மீதான தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மந்தீப் சிங்குக்கு மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை எஸ்ஐ மந்தீப் சிங்கை மதுரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 

Tags : டெல்லி காவல்துறை எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை. 

Share via