வரைவு வாக்காளர் பட்டியல்  நவம்பர் 1ல் வெளியிட முடிவு 

by Editor / 06-08-2021 04:32:10pm
 வரைவு வாக்காளர் பட்டியல்  நவம்பர் 1ல் வெளியிட முடிவு 

 

பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் 1 ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1.1.2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அதன்படி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்படும். அன்று முதல் 30 ந்தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை சமர்ப்பிக்கலாம்.20.12.2021 வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவோ அல்லது நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளவோ படிவம் 6,7,8, அல்லது 8ஏ ஐ சமர்ப்பிக்க வேண்டும்.


ஏதேனும் அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலையஅலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் இந்த மனுக்களை அளிக்கலாம். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களின்போது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் மனு கொடுக்கலாம். சிறப்பு முகாம் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.


அலுவலக நாட்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்த ஏற்புரை மற்றும் மறுப்புரை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் வழங்கலாம்.www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி' எனப்படும் செல்போன் செயலி போன்றவற்றின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.1.1.2022 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள உறுதிமொழியை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.


வாக்காளரின் பெயர் ஏற்கனவே பட்டியலில் இருந்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தவற விட்டு இருந்தால் எந்த நேரத்திலும் தாசில்தார், மண்டல அலுவலகத்தில் படிவம் 1 ல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via