சித்ரா பௌர்ணமிபக்தர்கள் கூட்டத்தால் திணறிய திருவண்ணாமலை நகரம்.

by Editor / 23-04-2024 10:34:52pm
சித்ரா பௌர்ணமிபக்தர்கள் கூட்டத்தால் திணறிய திருவண்ணாமலை நகரம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி மற்றும் மாதா மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. இதுபோன்ற விழா காலங்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை 4:16 மணிக்கு சித்ரா பௌர்ணமி தொடங்கியது. நாளை 24ம் தேதி புதன்கிழமை காலை 5:47 மணிக்கு சித்ரா பௌர்ணமி நிறைவடைய உள்ளதால் இன்று இரவு பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை முதலே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவு பக்தர்கள் வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2500 சிறப்பு பேருந்துகள், ஆறு சிறப்பு ரயில்கள் மற்றும் 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் வசதிக்காக 105 இடங்களில் அன்னதானம் வழங்கவும், கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளது. 

அதிகளவு பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரம் ஸ்தம்பித்ததுடன், கடல் அலை போல் மக்கள் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் வெள்ளம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சித்ரா பௌர்ணமிபக்தர்கள் கூட்டத்தால் திணறிய திருவண்ணாமலை நகரம்.

Share via