ரயில் மேலாளரை தாக்கிய நபர் 24 மணி நேரத்தில் கைது

by Staff / 02-05-2024 04:48:35pm
ரயில் மேலாளரை தாக்கிய நபர் 24 மணி நேரத்தில் கைது

சிக்னலுக்கு காத்திருந்த ரயிலின் மேலாளரை தாக்கி, உடைமைகளை பறித்த நபர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். சேலத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற பயணிகள் காலி ரயில் பெட்டி தொடர் திங்கட்கிழமையயன்று  சிக்னலுக்காக வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் ரயில் மேலாளர் திருமதி. ராக்கி பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த ரயில் மேலாளர் பெட்டியில் திடீர் என நுழைந்த இரண்டு நபர்கள் ராக்கியை தாக்கி அவரது உடைமைகளை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த ராக்கி முதல் உதவிக்கு பின்பு ரயில்வே மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே சம்பவம் நடந்தவுடன் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் படையினை ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் சிவதாஸ், ரயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கூட்டாக அமைத்தனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீசாரும் குற்றவாளிகளை தீவிரமாக தேடினர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை மதியம் செல்லூர் மார்க்கெட்டில் பிடிபட்டான். அவனிடமிருந்து ரயில் மேலாளரின் மொபைல், போன் வங்கி அட்டைகள், பணம் ரூபாய் ஆயிரத்தை கைப்பற்றினர். ரயில் மேலாளரிடமிருந்து பறித்து சென்ற ரூபாய் 1500 ல் ரூபாய் 500ஐ செலவழித்து விட்டதாக தெரிகிறது. பிடிபட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்திற்க்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தாக்குதலில் சம்பந்தப்பட்ட மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் பெண் பயணிகள், பெண் ஊழியர்கள் பாதுகாப்புக்காக போதியளவில் ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் மற்றும் ரயில்வே பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via