மத்திய அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்

by Admin / 09-08-2021 05:21:22pm
மத்திய அரசின் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டம்

 

மீனவ தடுப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள மீனவ தடுப்பு சட்ட மசோதாவை திரும்பபெறக்கோரியும், அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புகொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடபோவதாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
 
அதன்படி கோட்டக்குப்பம் அருகே உள்ள மீனவகிராமங்களான சோதனை குப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம், சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 6 மீனவகிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் இன்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டான அருகில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கையில் கருப்புகொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவ தடுப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் மீனவகிராமங்களை சேர்ந்த பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

Tags :

Share via