கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர்

by Editor / 12-08-2021 12:41:18pm
கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளிக்கும் 127வது சட்ட திருத்த மசோதாவான ஓ.பி.சி மசோதாவை நேற்று முன் தினம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.இதன்மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினர் உட்பட 386 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து, ஓபிசி வகுப்பினரை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேறியதாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டுகால காயங்களுக்குச் சிறு மருந்தாகவும் சமூகநீதிக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ள இடஒதுக்கீடு வரலாற்றில், இந்நாள் என்றும் நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via