விஜய் மல்லையாவின் ஆடம்பர வீடு ரூ.52 கோடிக்கு ஏலம்

by Editor / 15-08-2021 05:15:37pm
விஜய் மல்லையாவின் ஆடம்பர வீடு ரூ.52 கோடிக்கு ஏலம்

 

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகமான மும்பை கிங் பிஷர் ஹவுஸ் வெறுமனே ரூ.52 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கடனை வாங்கி, அதைத் திருப்பித்தராமல் நாட்டைவிட்டுச் சென்று இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர அரசு முயன்று கொண்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.


மும்பையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கிங் பிஷர் ஹவுஸ் செயல்பட்டு வந்தது. மும்பை விமான நிலையத்துக்கு அருகிலிருக்கும் அந்தக் கட்டடத்தை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தி, அதை 2016ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்ய முயன்றன. ஆரம்பத்தில் இதை 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக நடந்த ஏலத்தில் விற்பனையாகவில்லை.

முடிவடைந்த இழுபறி

அதன் பிறகு பல முறை இந்தச் சொத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டியும் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் கழித்து, வெறும் 52 கோடி ரூபாய்க்கு கிங் பிஷர் ஹவுஸ் விற்பனையாகியிருக்கிறது.


இந்தக் கட்டடம் மும்பை விலே பார்லே விமான நிலையம் அருகில் இருப்பதால் அதை மேற்கொண்டு இடித்துவிட்டு அதிக உயரத்தில் கட்ட முடியாது. அதற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி கொடுக்காது. எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள் இதை வாங்க தயக்கம் காட்டிவந்தன. தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியிருக்கிறது.


கடந்த ஜூலை 26ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை, அவருடைய கடனுக்காக உலகம் முழுவதும் முடக்கலாம் என்று இந்திய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இதனால் மல்லையா உலகம் முழுவதும் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான கடன் கொடுத்த வங்கிகள் முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via